
மானு மிகவும் அழகானவள். அழகு என்றால் சிவப்போ, மாநிறமோ அல்ல. அவள் தேவதையின் நிறம், கடவுளின் மனம் கொண்டவள்.
மானு இருக்கின்ற இடம் சொர்க்கம், நந்தவனம் அல்லது மிகச்சிறந்த உன்னதமான இடம் எதுவோ அந்த இடம் என்று சொல்லலாம்.மானு இருக்கும் இடத்தில் சோகத்திற்கு இடமே இல்லை.
மானுவுக்கு இசை மிகவும் பிடிக்கும். இல்லை இல்லை, இசைக்கு மானுவை மிகவும் பிடிக்கும். அப்படிச் சொல்வது தான் பொருந்தும்! அவள் விரும்பி வாசிப்பது கிடாரும், பியானோவும்.
ஓவியம் வரைவதும் ஒரு பொழுதுபோக்கு. "உயிரோவியம் ஒன்று ஓவியம் வரைகிறது" - பார்த்திபன் ரசிகன் ஒருவன் அவளைப் பார்த்து சொன்ன கவிதை இது! அவளுக்கு கணினி அறிவியல் பிடிக்காது. ஆனால் பலமுறை சிக்கலான பிரச்சனைகளை சில நொடிகளில் தீர்த்திடுவாள். மானுவுக்கு பல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இருப்பினும் அவளுக்கு ஓரிடத்திலேயே இருந்து பணிபுரிவதில் விருப்பம் இல்லை.
மானுவுக்குச் சுற்றுப்பயணம் செல்வது பிடிக்கும்,ஸ்கேடிங் தெரியும், ஆடத் தெரியும், பாடத் தெரியும். இப்படி ஒரு பெண் எங்களுக்கில்லையே என்று எல்லா பெற்றோரையும் ஏங்கச் செய்திடுவாள். ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் அவளிடம் குவியும் காதல் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது!
பொதுவாக, இவளைப் பார்க்கின்ற எல்லோரும் சொல்வது இது தான் - "நீங்க ரொம்ப லக்கி. இவ்ளோ அழகா, சமத்தா, இந்த சின்ன வயசுல இவ்ளோ அறிவா?". நானும் எவ்வளவு தடவை தான் அவளுக்கு திருஷ்டி கழிப்பது?
எல்லாம் சரி, யார் இந்த மானு? மானு என் நான்கு வயதுக் குழந்தை. மானு எப்போது பிறந்தாள்? எங்கே, எப்படி வளர்ந்தாள்? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. அவளை நான் முதன் முதலில் பார்த்த போது அவளுக்கு நான்கு வயது. அவள், தன் பாட்டி வீட்டில் அப்பாவுடன் இருக்கிறாள். அவளுக்கு சிறகுகள் உண்டு. நினைத்த மாத்திரத்தில் என்னிடம் பறந்து வந்திடுவாள். எனக்கு ஆறுதல் சொல்வாள். கொஞ்சுவாள், என்னைச் சிரிக்க வைப்பாள். மானஸீ என் நிஜக் குழந்தை அல்ல, கற்பனைக் குழந்தை.
மானு நிஜமானதும், அவளை நான் இதைச் செய், அதைச் செய் என்று சொல்ல மாட்டேன். கணினியும் வேண்டாம், ஸ்கேடிங்கும் வேண்டாம். அவளுக்கு பிடித்ததை அவள் செய்யட்டும்., நன்றாக விளையாடட்டும். அவள் மேல் நான் எதையும் திணிக்க மாட்டேன். என் குழந்தை எல்லா கலைகளையும் கற்றுத்தேர்ந்த குட்டி தேவதையாய் இருப்பதை விட குழந்தைப் பருவத்தில் குழந்தையாய் இருப்பதே அழகு! மானு மான்குட்டியாகவே இருக்கட்டும்!